‘தீபகச்செல்வன்,”ஒரு காலத்தின் சாட்சியம்”

82
0
Spread the love

எழுத்தாளர் வெற்றிச்செல்வி எழுதிய ‘தீபகச்செல்வன்’ வாழ்க்கை வரலாற்று நாவலின் வெளியீட்டு விழா நேற்று 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அடம்பன் கூட்டுறவு அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

எழுத்தாளரும் வெளியீட்டாளருமான யோ. புரட்சி தலைமையில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில்,

நூல் வெளியீட்டுரையை நூலகம் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அலுவலர் திருமதி றஞ்சிதமலர் நந்தகுமார் நிகழ்த்தினார்.

‘தீபகச்செல்வன்’ குடும்பத்தின் பெற்றோர், சகோதரர்கள், துணைவியார் மற்றும் பிள்ளைகள் இணைந்து இந்நூலை வெளியிட்டு வைத்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நூலாசிரியர் வெற்றிச்செல்வி மற்றும் மூலக்கதையாளர் தீபகச்செல்வன் ஆகியோர் இணைந்து நூல்களை வழங்கினர்.

நூலுக்கான நயப்புரையை மடுவலயக் கல்வித் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் பிலிப் நேரில் பிரிட்டோ நிகழ்த்தினார்.

ஒரு காலத்தின் சாட்சியம்
ஈழத்தின் நீண்ட போர்க்காலப் பின்னணியில் ஒரு சிறுவனின் வாழ்க்கை எவ்வாறு நகர்ந்தது, ஒரு இளைஞன் எவற்றை நேசித்தான், ஒரு மனிதன் எதற்காகப் போராடினான், எவற்றை இழந்தான், மீண்டும் எவ்வாறு எழுந்தான் என்பவற்றை பதிவு செய்யும் வகையில் ‘தீபகச்செல்வன்’ நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.
இலட்சியங்களுக்கும் வாழ்வின் நெருக்கடிகளுக்கும் இடையில் சிக்கித் தவித்த ஒரு தலைமுறையின் வாழ்க்கைப் பயணத்தை இந்நாவல் பதிவு செய்கிறது.

சிறுபராய நினைவுகள், போராட்ட வாழ்க்கை, குடும்பம், உறவுகள், இழப்புகள், பிரிவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு பரிமாணங்கள் இந்நாவலில் பதிவாகியுள்ளன.

இரு தலைமுறைகள் சுமந்த அனுபவங்களின் தடங்களை உள்ளடக்கியுள்ள இந்நூல், ஒரு தனிமனிதனின் வாழ்க்கைக் கதையாக மட்டுமன்றி, ஒரு காலகட்டத்தின் சமூக வரலாற்றைப் பதிவு செய்யும் ஆவணமாகவும் அமைகிறது.
தனது வாழ்வைத் தானே பின்னோக்கிப் பார்த்து, மறக்க முடியாத நினைவுகளையும் மறைத்துவைக்க முடியாத உண்மைகளையும் எழுத்தின் மூலம் பதிவு செய்யும் முயற்சியாக இந்நாவல் அமைந்துள்ளதாக நூலாசிரியர் வெற்றிச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதன் போது,மூலக்கதையாளர் தீபகச்செல்வன் மற்றும் நூலாசிரியர் வெற்றிச்செல்வி ஆகியோர் இணைந்து நன்றியுரையை வழங்கினர்.

மேலும், அந்தோனியார்புரம் கிராம இளைஞர்களின் பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here