அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற மூன்று பேருந்துகள் மோதிய கோர விபத்து தொடர்பாக முறைமையான விசாரணைகளை முன்னெடுத்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மிகிந்தலை பொலிசாருக்கு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தையும் சம்பந்தப்பட்ட மூன்று பேருந்துகளையும் நேரில் சென்று பார்வையிட்ட நீதவான், மோட்டார் வாகன பரிசோதகர் மூலம் உரிய பரிசோதனை அறிக்கைகளைப் பெறுமாறும் பணித்துள்ளார்.
அத்துடன், அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பார்வையிட்ட அவர், பிரேத பரிசோதனைகளை உடனடியாக நடத்தி அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியைக் கேட்டுக்கொண்டுள்ளார். வவுனியாவிலிருந்து ரம்பேவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மற்றொரு பேருந்துடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இச்சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







