கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராகக் கொழும்பு மாநகர சபையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் பொதுப் பூங்காவில் தங்கியிருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், உரிய அனுமதியின்றி தற்காலிக அமைப்புகளை ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கறுவாத்தோட்டம் பொலிஸார் நேற்று (22) இரவு போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்று நீதிமன்ற உத்தரவைப் போராட்டக்காரர்களுக்கு வாசித்துக் காட்டியுள்ளனர்.
எனினும், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். இதனால், நீதிமன்ற உத்தரவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறுவார்களா அல்லது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பார்களா என்பது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன.






