கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

54
0
Spread the love

இலங்கையின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். அரபிக்கடல் பகுதியில் இருந்து நகர்ந்த வளிமண்டலச் சுழற்சி தமிழ்நாட்டைக் கடந்து வங்காள விரிகுடாவுக்குள் நுழையத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட விசேட வானிலை அறிக்கையில், வடக்கு, கிழக்கு, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (ஒக்டோபர் 26) பலத்த மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பரவலாகக் கனமழையும் சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளிமண்டலச் சுழற்சி யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதிகளைக் கடந்து திருகோணமலைக் கரையை அண்மித்து, பின்னர் வடகிழக்குத் திசையில் நகர்ந்து வலுவடையக்கூடும் என பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு வங்காள விரிகுடாவில் உருவாகும் அர்னாப் புயலிலிருந்து தனியான வானிலை நிகழ்வாக அமையக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான மழை காரணமாக யாழ்ப்பாணத் தீவகப் பகுதிகள் உள்ளிட்ட தாழ்நிலங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை வரை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தொடர்ச்சியான மழையால் நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் மலைப்பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அர்னாப் புயல் மற்றும் வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here