யாழில் மாணவர் போக்குவரத்துச் சேவையை முறைப்படுத்த நடவடிக்கை

49
0
Spread the love

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை முறையான பதிவுக்கு உட்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட சேவையாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட பாடசாலை வாகனச் சங்கத் தலைவர் கோகுலம் தலைமையில், சுண்டுக்குழியில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியும் கலந்துகொண்டுள்ளார்.

1999ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் பல தனியார் வாகனங்கள் இதுவரை முறையான பதிவின்றி இயங்கி வந்துள்ளன. அதேவேளை, மாவட்டத்தில் செயற்பட்டு வந்த பாடசாலை வாகனச் சங்கமும் பதிவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாணவர் போக்குவரத்துச் சேவையை முறைப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள தாய்ச் சங்கத்தின் பிரதிநிதிகள், மாணவர் போக்குவரத்துச் சேவைக்கான நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் பதிவு தொடர்பான விளக்கங்களை இதன்போது வழங்கியுள்ளனர்.

இதன் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் வாகன உரிமையாளர்களுக்கும் சங்கத்தின் ஊடாகத் தேவையான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், போக்குவரத்துச் சேவையைப் பொறுப்புடனும் முறையான அங்கீகாரத்துடனும் முன்னெடுப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here