இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனஞ்சய டி சில்வா தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பை குசல் மெண்டிஸ் ஏற்றுள்ளார்.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விசேட கலந்தாலோசனைக்குப் பிறகு, தெரிவுக் குழு இம்முடிவை எடுத்துள்ளது. இதன்படி, பாகிஸ்தானில் விரைவில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே குசல் மெண்டிஸின் தலைமையில் அமையும் முதல் பணியாக இருக்கும்.
குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன்மூலம் அவர் இலங்கை டெஸ்ட் அணியை வழிநடத்தும் 19-ஆவது தலைவரானார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நிலையான தலைவராக இருந்து வரும் அவர், 2015-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
31 வயதான குசல் மெண்டிஸ் இதுவரை 75 டெஸ்ட் போட்டிகளில் (139 இன்னிங்ஸ்) பங்கேற்று 4,836 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அவரது சாதனையில் 10 சதங்களும் 23 அரைச் சதங்களும் அடங்கும்.
தனஞ்சய டி சில்வா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று காலை ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தனஞ்சய தொடர்ந்து அணியின் ஒரு வீரராகவே பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







