கண்ணுக்கு மேல் வளர்ந்த பல்

36
0
Spread the love

இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் இடது கண்ணுக்கு மேலே பல் வளர்ந்திருந்த சம்பவம் மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடது கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் சிறுவனுக்கு வலியற்ற வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாதாரண கட்டி எனக் கருதப்பட்ட இந்த வீக்கம், பின்னர் அதிகரித்ததுடன், தோலின் வழியாக இரண்டு கடினமான வெள்ளை நிற முனைகள் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. இதையடுத்து சிறுவனை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தியாவின் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் சிறுவனுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சி.டி. ஸ்கேன் பரிசோதனையில், அவரது இடது கண் குழியின் மேற்பகுதியில் முழுமையாக வளர்ச்சியடைந்த கோரைப்பல் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. வழக்கமாக வாயில் வளர வேண்டிய பல் வேறொரு இடத்தில் வளர்வது மருத்துவ ரீதியாக ‘இடம்பெயர்ந்த பல்’ என அழைக்கப்படுகிறது.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பல்லை வெற்றிகரமாக அகற்றினர். சிறுவனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்ட வரலாறோ, மரபணு தொடர்பான பாதிப்புகள் இருப்பதற்கான அறிகுறிகளோ கண்டறியப்படவில்லை. மேலும், மண்டையோட்டின் வேறு பகுதிகளில் கூடுதல் பற்கள் இருப்பதற்கான ஆதாரங்களும் ஸ்கேன் பரிசோதனையில் தென்படவில்லை.

மூக்கின் உட்பகுதி, அண்ணம் உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான இடங்களில் பற்கள் வளர்ந்த சம்பவங்கள் முன்னர் பதிவாகியுள்ளன. எனினும், கண் குழியின் மேற்பகுதியில் இவ்வாறு பல் வளர்ந்ததாகப் பதிவான முதல் சம்பவம் இதுவாக இருக்கலாம் என இந்த வழக்கை ஆய்வு செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிய நிகழ்வு தொடர்பான ஆய்வு விவரங்கள் மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. பல் இவ்வாறு தவறான இடத்தில் வளர்ந்ததற்கான துல்லியமான காரணத்தை மருத்துவர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here