அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தொழிற்சங்க மாநாடு இன்று (12.07.) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான பரிசு கூப்பன்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் தொழிற்சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தொழில்சார் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்தோடு நாடளாவிய ரீதியில் செயற்படும் சமுர்த்தி வங்கிகளை மேலும் வலுப்படுத்தி,மக்களின் சேமிப்புப் பணத்தை பாதுகாப்பான முறையில் நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மாநாட்டின் ஒரு பகுதியாக தொழிற்சங்கத்தின் நிர்வாகத் தெரிவுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தேசிய தொழிற்சங்கத் தலைவர் சுஜித் பெரேரா, பொதுச் செயலாளர் கித்சிறி கமகே, பொருளாளர் ஜனாப் எம்.எம். அன்வர், பிரதித் தலைவர் விஜிதகுமார கொடித்துவக்கு, மாத்தளை மாவட்ட தலைவர் சிசிர குணவர்த்தன, அனுராதபுரம் மாவட்ட தலைவர் வசந்த அனுர, செயலாளர் லலித், மன்னார் மாவட்ட தலைவர் எம்.என். அஸ்லீம் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளும், தேசிய தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.







