ஒரு சில அதிகாரிகளின் அசமந்த போக்கினால், மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட விசேட உலர் உணவு பொதியைப் பெற்றுக் கொள்ள முடியாது உள்ளது என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கச் செயலாளர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார் . இன்றைய தினம் (24.12) புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 13 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தினர் நிலை தொடர்பாக ஜனாதிபதி வினவி இருந்தார். அதற்கு அமைவாக பேரிடர் காலத்தில் மீனவ சமூகம் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டமை தொடர்பில் கடற் தொழில் உதவி பணிப்பாளரினால் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது, மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் மீனவர்களுக்குமான உலர் உணவு பொதிகளை விசேடமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்திருந்தார். அத்தோடு ஜனாதிபதி செயலத்திலும் அது தொடர்பாகப்
பேசப்பட்டு அனைத்து மீனவர்களுக்கான உலர் உணவு பொதிகள் மன்னார் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
12000 மீனவர்களில் இதுவரையில் 6000-க்கு உட்பட்ட மீனவர்களின் பெயர் பட்டியல் கடற்தொழில் திணைக்ளத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .அதேவேளை ஓரிரு சங்கங்கள் இன்னும் சரியான முறையில் பெயர் பட்டியலை அனுப்பி வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது .
எனினும் இந்த உலர் உணவு பொடிகளை வழங்குவதில் தடங்கலும் வேறு கதைகளும் இருப்பதாக நாம் அறிகிறோம் .
அதாவது உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகின்ற இந்த வேளையிலே, கடற் தொழிலாளர்களுக்கு என விசேடமாக அனுப்பப்பட்ட பொதிகளை ஏற்கனவே உலர் உணவு பெற்ற மீனவர்களுக்கு வழங்காமல் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வழங்கப்பட போவதாக அறிய கிடைத்துள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு விசேடமாக அந்த பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணித்திருந்தார்.
இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் போது முதலில் பாதிக்கப்படுபவர்கள் மீனவர்கள் தான். அவ்வாறானவர்களுக்கு இன்று வரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்பதுதான் எங்களது ஆதங்கமாக உள்ளது. இதற்கு அமைவாக தான் ஜனாதிபதியும் ஒரு வார காலத்துக்கான விசேட உணவு பொதிகளை வழங்கி இருக்கின்றார்.
இதனை மீனவர்களுக்கு வழங்குவதில் திணைக்களத் தலைவர்களுக்கு உள்ள இடையூறு என்ன? அவர்களுக்கு இதனை வழங்குவதில் பிரச்சனைகள் இருந்தால் இந்த விடயத்தை மீண்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நாங்கள் தீர்வினைத் தேடுவோம். இல்லாவிடில் பெயர்ப் பட்டியில் உள்ள அனைவருக்கும் இந்த நிவாரணங்கள் வழங்கப்படும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் திறம்பட செயல்படுகிறார்கள் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை நாங்கள் இங்கு அனைத்து அதிகாரிகளையும் குறை கூறவில்லை. ஒரு சிலரின் நடவடிக்கையைத் தான் கூறுகின்றோம். எனவே இதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த ஊடக சந்திப்பினை நடாத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.







