அதி அபாய வலயங்களில் 5,000 க்கும் மேற்பட்ட வீடுகள்

111
0
Spread the love

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 5,000க்கும் அதிகமான வீடுகள் அதிக அபாய வலயங்களில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அந்த மக்களுக்காக பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்வரும் வாரத்தில் இந்தத் தரவுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும், ஆய்வுகளின் முடிவுகளுக்கு அமைய இந்தத் தரவுகள் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘டித்வா’ புயல் காரணமாக நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பாரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதன்படி கண்டி மாவட்டத்தில் 363 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 162 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 219 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன.

இதேபோல், குருநாகல் மாவட்டத்தில் 89 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், கேகாலை மாவட்டத்தில் 79 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும், பதுளை மாவட்டத்தில் 312 பாரிய அளவிலான நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன.

இந்த நிலப்பகுதிகளில் வசித்த மக்கள் தற்போது வீடுகளை இழந்து பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த மக்கள் வசித்த இடங்களை ஆய்வு செய்ய 50 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கண்டிக்கு 15 குழுக்கள், பதுளைக்கு 5 குழுக்கள், கேகாலைக்கு 10 குழுக்கள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here