காலி, கராபிட்டிய பகுதியில் 25 வயதுடைய இளம் மருத்துவ மாணவியொருவர் ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிந்தோட்டை பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள ரயில் பாதையைப் பரிசோதிப்பதற்காகச் சென்ற ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவரே வீதியோரத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை முதலில் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளையில், உயிரிழந்த பெண்ணின் அருகில் அவரது கைப்பேசி தொடர்ந்து ஒலித்துள்ளது.
அதற்குப் பொலிஸ் அதிகாரி ஒருவர் பதிலளித்த போதே அது குறித்த தகவல் பெண்ணின் கணவருக்குத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவனின் ஆரம்பகட்ட வாக்குமூலத்தின்படி, தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவம் குறித்துக் காலிப் பொலிஸார் தீவிரமான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.







