மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு இன்றைய தினம் (09.07) புதன்கிழமை காலை மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் கன்னி உரை இடம் பெற்றது. அதன் பின்னர் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நகர சபை அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட பாதீட்டை ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பை வழங்குமாறு சபையில் தவிசாளரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எனினும் பல உறுப்பினர்கள் குறித்த விடயத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தனர். நகர சபை அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட குறித்த பாதீட்டை மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகிய தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என பல உறுப்பினர்கள் சபையில் தெரிவித்த நிலையில், சபையில் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டது.
இந்நிலையில் சபை அமர்வானது தவிசாளரினால் அரை மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டது.பின்னர் மீண்டும் சபையின் செயற்பாடுகள் இடம் பெற்ற போது, நகர சபை அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட பாதீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில்,சபை உறுப்பினர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு நீண்ட நேரம் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
மேலும், குறித்த பாதீடு தொடர்பில், உறுப்பினர்கள் சபையின் செயலாளரிடம் வினவிய போது செயலாளர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நகர சபை உறுப்பினர்கள் சிலர் செயலாளருக்கு எதிராகக் கருத்தைத் தெரிவித்தனர்.இதனால் நீண்ட நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதன்போது தொடர்ச்சியாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சபை அமர்வானது நகர முதல்வரினால் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது







