அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (29.10) மன்னார் ஓப்பின் (OPENE) நிறுவனத்தில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது .
குறித்த நிகழ்வில்,வட மாகாணத்தில் 90 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு முன்னர் முஸ்லிம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்த வரலாற்றுச் சான்றுகள்,அவர்களின் வாழ்விடங்கள், என்பன புகைப்படங்களாகக் கண் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் வடமாகாணத்தின் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகரும்,வடக்கு கிழக்கின் பெண்கள் வலையமைப்பின் செயற்பாட்டாளருமான சிறீன் ஷரூப், "90 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பில் இரு சாராராலும் திரிபுபடுத்தப்பட்ட கதைகள் பேசப்பட்டு வருகின்றது.
உண்மையில் அது ஒரு துன்பியல் சம்பவம். அதிலிருந்து முஸ்லிம் தமிழ் உறவுகளை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காகவே இன்றைய தினம், 90 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்பு தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வளவு நெருக்கமாக வாழ்ந்தார்கள் அந்த உறவு எவ்வளவு காத்திரமாக இருந்தது என்பது தொடர்பில் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தியதோடு கலந்துரையாடலையும் முன்னெடுத்து இருக்கிறோம்.
தமிழ் முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்திற்காகவே குறித்த நிகழ்வை முன்னெடுத்துள்ளோம்.
இதே போன்ற ஒரு கலந்துரையாடலை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடாத்த தீர்மானித்துள்ளோம் என்றார். மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ர சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் தெரிவிக்கையில், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு மீள குடியேறி இருக்கின்ற முஸ்லிம் மக்களை இங்கு இருக்கின்ற இளம் சமுதாயத்துடன் ஒன்றிணைக்கும் நோக்குடன் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து, 35 வருட காலத்துக்கு முன்பாக இங்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதை அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் அனுபவப் பகிர்வுகள் மூலம் வெளிப்படுத்தி முஸ்லிம் தமிழ் உறவினை கட்டி எழுப்பும் வகையில் இந்த நிகழ்வினை நடத்தியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் வருகை தந்து கண்காட்சியைப் பார்வையிட்டதுடன் கலந்துரையாடலிலும் பங்கேற்றனர்.








