மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (29.10) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரைப் பகுதியிலும், களனி கங்கையின் முகத்துவாரத்திற்கு அருகிலும் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மற்றொரு ஆணின் சடலம், பமுனுகம, எபாமுல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீடொன்றின் பின்புற காணியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நபர், இறுதியாக கறுப்பு நிற சாரம் மற்றும் இளம் நீல நிறக் குறுகிய கை சட்டை அணிந்திருந்ததாகவும், அவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 5 அடி 7 அங்குல உயரம் உடையவர், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்களின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பமுனுகம பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம், திடீர் மரண விசாரணைக்குப் பின்னர் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







