இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கை கடற்படைக்கு சொந்தமான விசேட கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கப்பல், விபத்து ஏற்பட்ட இடத்தை நோக்கி தற்போது புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த மீன்பிடிப் படகு தென்கிழக்கு கடல் பிரதேசத்தில், கரையிலிருந்து சுமார் 300 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் படகில் இருந்த நான்கு மீனவர்கள், ஒரு இந்தோனேசிய மீன்பிடி படகின் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த மீனவர்களை அழைத்து வருவதற்காக தற்போது கடற்படைக் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த பலநாள் மீன்பிடிப் படகு கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடிப் படகு கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அதன் உரிமையாளர் அறிவித்திருந்ததாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான படகில் மொத்தம் ஆறு மீனவர்கள் இருந்ததாகவும், அவர்களில் நால்வர் இந்தோனேசியப் படகு மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மீதமுள்ள இரு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், விபத்து நடந்த படகு அருகே பயணிக்கும் வர்த்தகக் கப்பல் ஒன்று இந்த மீனவர்களை ஏற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீன்பிடித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.







