பேரிடரால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலையை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்

187
0
Spread the love

நாட்டில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 578 மீனவர்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மீனவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் எம் என் ஆலம் தெரிவித்துள்ளார் .

நேற்று (12.12) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், "நாளைய தினம் ஜனாதிபதி அவர்கள் மன்னாருக்கு வருகை தர உள்ள நிலையில் அவரை சந்திப்பதற்கு எங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

எனினும் மாவட்டத்தில் திணைக்களங்கள் சார்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டு இருப்பதினால் எம் சார்பாக கடற் தொழில் உதவிப் பணிப்பாளர் கலந்து கொள்ளவுள்ளார்.

அவர் மூலமாக முழுமையான விடயங்கள் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.மாவட்டத்தில் பாதிப்படைந்துள்ள 578 மீனவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். அது மாத்திரமில்லாமல் இதுவரைக்கும் பதிவு செய்யப்படாத மீனவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் சீர் செய்யப்பட வேண்டும். மன்னார் மாவட்டத்தில் கடத்தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து இன்று வரை அவர்கள் கடற்றொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் வானியல் திணைக்களம், கடற்படை மற்றும் அரசாங்கம், மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கின்றது .அதன் பிரகாரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லாவிட்டால் அவர்களுக்கான எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை.

மீனவர்களுக்கான எந்த இழப்பீடுகளும் வழங்கப்படுவதில்லை. உதாரணமாக புரவி சூறாவளியின் போது மீனவர்களினால் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு இன்று வரை ஒரு ரூபாய் கூட இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்த அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் இழப்பீடு வழங்கும் என்ற நம்பிக்கையோடு மன்னார் மாவட்ட மீனவர்கள் இருக்கிறார்கள்.எனவே இதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். கௌரவ ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருக்கிறார்.

ஒரு வருடமும் நான்கு மாதங்களும் கடந்து இந்த அனர்த்தம் ஆனது அவரை மன்னாருக்கும் வரத் தூண்டி உள்ளது .எனவே இந்த அனர்த்தம் தொடர்பிலும்,மன்னார் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் எடுத்து அதற்கான தீர்வினை ஜனாதிபதி வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு வடபகுதியை எடுத்துக் கொண்டால் மன்னார் தொடக்கம் முல்லைதீவு வரை கடந்த 27ஆம் திகக்குப் பிறகு இந்திய மீனவர்களின் அட்டகாசம் பெருமளவில் அதிகரித்து உள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து வடக்கு நோக்கி ஆயிரக்கணக்கான படகுகள் வந்த வண்ணமே உள்ளன. இதனால் பல மீனவர்களின் வலைகள் அறுத்தெறியப்பட்டுள்ளன.

குறிப்பாக மன்னார்,தலைமன்னார் பகுதியிலே கடந்த 27 ஆம் திகதி இரவு 15க்கு மேற்பட்ட மீனவர்களின் இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள நண்டு வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டிருக்கின்றன.

இதே போல காரைநகர்,நெடுந்தீவு, முல்லைத்தீவு ,வலிகாமம் வடக்கு ஆகிய பிரதேசங்களிலும் மீனவர்களின் இவ்வாறான முறைப்பாடுகள் காணப்படுகின்றது.

இது சம்பந்தமாக நாங்கள் நேற்று முன் தினம் (10.12)வட மாகாண ஆளுநருக்கும் இந்திய துணை தூதரகத்திற்கும் கடிதங்களை வழங்கி உள்ளோம். வெறுமனே இந்தப் பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி எந்த வித தீர்வும் கிடைக்கப்போவதில்லை.எனவே ஜனாதிபதியை நேரடியாக நாங்கள் சந்தித்து உரையாடுவதற்கான சந்தர்ப்பம் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.எனத் தெரிவித்தார்."