நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது உயர்விற்கு BASL கடும் எதிர்ப்பு!

12
0
Spread the love

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ள தொலைநோக்கற்ற யோசனைக்கு சட்டத் துறையைச் சேர்ந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை 11 மணியளவில் நடைபெற்ற அச்சங்கத்தின் விசேட பொதுச்சபை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சட்டத்தரணிகள் அனைவரும் கரங்களை உயர்த்தி இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டதாக அவர் கூறினார்.

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்த யோசனைக்கு நீதிபதிகள் கூட எதிர்ப்பு தெரிவிப்பதாக சுட்டிக்காட்டிய ராஜீவ் அமரசூரிய, இன்று நேரடியாக வருகை தந்த மற்றும் ஜூம் (Zoom) தொழில்நுட்பம் ஊடாக இணைந்த அனைத்து சட்டத்தரணிகளும் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறினார்.

அரசாங்கம் எடுத்துள்ளது ஒரு அறிவற்ற தீர்மானம் எனத் தெரிவித்த சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய, இது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட பலத்த அடி என்றும் குறிப்பிட்டார்.

அதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ளதாகவும், பொதுச்சபையின் ஏகோபித்த சம்மதம் கிடைத்துள்ளதால் இதற்கு எதிராக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னரை விட மிகச் சிறந்த முறையில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள இந்த யோசனை ஒரு குற்றச் செயல் எனக் கூறிய அவர், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், நீதித்துறை கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் அதன் விளைவுகள் நீண்டகால அடிப்படையிலேயே அமையும் என்றும் எச்சரித்தார்.

அரசாங்கம் அமல்படுத்தியுள்ள இந்த விசித்திரமான யோசனையினால் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அசௌகரியத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறிய அவர், உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் ஏனைய நீதிபதிகளையும் அசௌகரியத்திற்கு உட்படுத்தாமல், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு இதனை நிறுத்த முடியும் என்றும், அப்படி இல்லையெனில் ஜனநாயக மக்கள் தீர்ப்பிற்கு செல்ல வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், அரசாங்கம் இது குறித்து கலந்துரையாடுவதற்கு இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை எனக் குறிப்பிட்ட சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய, இன்று (29) மாலை 5 மணிக்கு நீதி அமைச்சரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here