நேற்றைய தினம் (29.12) பகல் 12 மணி அளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் நுழைந்த கும்பலொன்று கடமையில் ஈடுபட்டிருந்த புதுக்குடியிருப்பு பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்தமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்,
மன்னார் கிராம அலுவலர்கள் மற்றும் மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இன்று (30.12) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இப் போராட்டத்தில் கலந்து கொண்ட
கிராம அலுவலர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்’
நேற்றைய தினம் கிராம அலுவலர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
நாங்கள் கிராம அலுவலர்களாக இருப்பினும் நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் எல்லா பிரச்சினைகளும் உண்டு. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் அயராது பாடுபடுகிறோம். அனர்த்தத்தின் பின்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு ள்ள மக்களுக்கும் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கும் உரிய சேவைகளை வழங்குகின்றோம். அரச சுற்று நிருபத்துக்கு அமைவாகவே நிவாரணப் பணிகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.
ஆயினும் பொதுமக்களின் இவ்வாறான செயற்பாட்டினால் நாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றோம். பாதிப்படைந்தவர்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போது பாதிப்பிற்கு உள்ளாகாதவர்களும் அரசாங்கம் வழங்குகின்ற பணம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் இவ்வாறு செயற்படுகிறார்கள்.
ஊழலற்ற அரசாங்கம் ஊழலற்ற தலைவர்கள் மற்றும் ஊழலற்ற அதிகாரிகள் வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மக்கள் தாங்களும் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். தங்களுடைய தேவைகளுக்காக அரச சுற்று நிருபத்தை மீறி கிராம உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
அரசாங்கம் கொடுக்கின்ற நிதி அனைவருக்கும் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.
நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது நாங்கள் அவ்வாறு தவறுதலாக பாதிப்படையாதவர்களுக்கும் பணம் கொடுத்து விட்டால் நாங்கள்தான் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவோம்.
எனவே மிகுந்த நெருக்கடியுடன் செயற்படுகின்ற எங்களை அரசாங்கம், மேலதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.எமது பணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதன்போது ஸ்ரீலங்கா ஐக்கிய கிராம அலுவலர் சங்கத்தின் மன்னார் பிரதேச கிளையின் தலைவர் தெரிவிக்கையில்,
“நேற்றைய தினம் பெண் கிராம சேவகரைத் தாக்க முற்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று சுகையின விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
இதற்கு ஒரு தீர்வு கிடைக்காவிட்டால் இந்தப் போராட்டத்தை மாவட்ட ரீதியாக விஸ்தரிப்பது தொடர்பில் பரிசீலிக்க உள்ளோம்.
இன்று தொடக்கம் கிராம சேவகர்கள், தங்களது சாதாரண கடமைகள்,தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிவாரணப் பணிகள் மற்றும் 25,000 கொடுப்பனவு வழங்குகின்ற சகல பணிகளில் இருந்தும் விலகிக் கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்.
போராட்டத்தை தொடர்ந்து குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் மீதான தாக்குதல் முயற்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ள கோரி மன்னார் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்த கிராம உத்தியோகத்தர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் மன்னார் நகர, கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.







