உணவு கையாளும் நிலையங்களில் பொலித்தீன் பாவனையை உடனே தவிருங்கள் என மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் அறிவுறுத்தியுள்ளார்.
பூநகரிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற உணவுகையாளும் நிறுவன உரிமையாளர்கள்- ஊழியர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சூடான உணவுப் பொருட்களுடன் பொலித்தீன், பிளாஸ்டிக் தொடர்புறும் போது மைக்கிறோ, நனோ பிளாஸ்டிக் கூறுகள் உருவாகி உணவுடன் கலப்பதால் புற்றுநோய் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படக் காரணமாகின்றது. எனவே உடனடியாக உணவு கையாளும் நிலையங்களில் பொலுத்தீன் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக தவிருங்கள்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏறத்தாழ 500 வருடங்கள் வரை இயற்கையாக பிரிகையுறாது சூழலில் நிலைத்திருக்கக்கூடியவை. லஞ்சீற்றை தட்டிலிட்டு சூடான உணவுப்பொருட்களைப் பரிமாறுதல் , பொதி செய்தல், குழம்புசொதி கட்டுதல் போன்ற நடவடிக்கைகளால் உணவுப்பொருட்களில் நச்சு இரசாயனங்கள் சேர்ந்து அவை உடலையடைந்து புற்றுநோயை ஏற்படுத்தவல்லதோடு ஓமோன் சமநிலையைப் பாதித்து மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தக்கூடியன.
இப்பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும்போது அவை சுவாசத்துடன் கலந்து புற்றுநோயை ஏற்படுத்துதல், ஆஸ்துமாவை தூண்டுதல் மற்றும் பூமியின் பாதுகாப்புப்படையான ஓசோன் படையில் துவாரத்தை ஏற்படுத்தி பேராபத்தை விளைவித்தல் எனும் பாதிப்புகளை எற்படுத்துகின்றன.
பொலித்தீன் ,பிளாஸ்டிக் பொருட்களை தரை ,கடல் வாழ் உயிரினங்கள் உண்பதால் அவை குடல் அடைப்பு ஏற்பட்டு மரணித்தல், போசனைப் பொருட்களை குடல் உறிஞ்ச முடியாததாகி இறத்தல் மற்றும் உணவுச்சங்கிலியூடாக அவை மனிதரை அடைந்து பாதிப்புக்களை ஏற்படுத்தல் போன்ற அபாயங்களும் உருவாக்குகின்றன.
தொடர்ச்சியான பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையால் இதன் நனோ பிளாஸ்டிக் கூறுகள் தாய்ப்பால் மற்றும் விந்துகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புதிறன் பாதிக்கப்படல், விந்துகளின் வீரியம் குறைதல் போன்ற பாரதூரமான உயிரியல் கேடுகளும் ஏற்படுகின்றன.
உடனடியாகவே எமதும், எமது எதிர்கால சந்ததியினதும் நல்வாழ்வை முன்னிட்டு உணவகங்களில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை முற்றாக தவிருங்கள். அதற்குப்பதிலாக வாழையிலைகள் , வாழைத்தடல்களைப் பயன்படுத்துதல்,கண்ணாடி மற்றும் மாபிள் தட்டுக்களை சுடுநீரில் கழுவிப் பயன்படுத்துதல் , உணவுத்தர மெழுகு பூசப்பட்ட கடதாசி மற்றும் காட்போட் பெட்டிகளை உணவு பொதி செய்யப் பயன்படுத்துதல் , சூடான பானங்களைப் பருக உலோக , மாபிள் கோப்பைகளை மட்டுமே பயன்படுத்துதல் என்பன மிகவும் பாதுகாப்பான முறைமைகளாகும்.
அனைவரிடமும் இது குறித்த போதிய அறிவிருக்கின்ற போதிலும் அதைக் கடைப்பிடிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதால் உடனிருந்து கொல்லும் இந்த பொலித்தீன், பிளிஸ்டிக்கால் ஏற்படும் பிரதிகூலங்களைத் தடுக்க முடியும்” என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.







