பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் திட்டத்திற்கு அந்நாட்டின் பிரபுக்கள் சபை ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் பாடசாலைகள் சட்டமூலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தத்திற்கு ஆதரவாக 261 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் கிடைத்தன.
சமூக வலைத்தள பயன்பாடு இளைஞர்களிடையே மனநலப் பாதிப்பு, தீவிரவாதத் தூண்டல் மற்றும் வகுப்பறைகளில் கவனச்சிதறல் ஆகியவற்றை ஏற்படுத்துவதாகப் பலதரப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனை ஒரு “சமூகப் பேரழிவு” என வர்ணித்த முன்னாள் அமைச்சர் லார்ட் நாஷ், பதின்ம வயதினர் முதிர்ச்சியடையும் வரை அவர்களுக்குக் கால அவகாசம் வழங்க இந்தத் தடை அவசியம் என வாதிட்டார்.
இந்தத் திருத்தம் சட்டமானால், சமூக வலைத்தள நிறுவனங்கள் “மிகவும் பயனுள்ள” வயதுச் சரிபார்ப்பு முறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தத் திருத்தத்தைப் பொதுச்சபையில் தோற்கடிக்கப் போவதாகப் பிரதமர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உடனடியாகத் தடை விதிப்பதற்குப் பதிலாக, மூன்று மாத கால ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, அறிவியல் ரீதியான ஆதாரங்களைத் திரட்ட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தத் தடையால் சில பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என சில தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. பிரதான சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தால், சிறுவர்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத ஆபத்தான இணையதளங்களை நாடக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கல்வி மற்றும் சமூகத் தொடர்பு போன்ற சமூக வலைத்தளங்களின் நேர்மறையான பக்கங்களைச் சிறுவர்கள் இழக்க நேரிடும் என தொழிற் கட்சிப் பிரபு லார்ட் நைட் கவலை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியா 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு 10 முக்கிய சமூக வலைத்தள தளங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
அந்த முன்மாதிரியைப் பின்பற்றியே பிரித்தானியாவிலும் இந்த அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..







