மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க புதிய எரிபொருள் முகாமைத்துவத் திட்டம்

30
0
Spread the love

மீன்பிடித் தொழிலின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக புதிய எரிபொருள் முகாமைத்துவத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பல நாள் மீன்பிடிக் படகுகளுக்கு மீன்பிடித் துறைமுகங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் அதேவேளை, படகு கண்காணிப்பு அமைப்பின் (VMS) ஊடாக படகுகளின் பயணத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு, தேவையான எரிபொருள் அளவு முறையாக நிர்வகிக்கப்படும்.

ஒரு நாள் மற்றும் சிறிய ரக மீன்பிடிப் படகுகளுக்கு, கடற்றொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட சுமார் 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக, மீன்பிடி அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் முன்னைய நடைமுறைப்படியே எரிபொருளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தினசரி இயங்கும் இவ்வாறான சுமார் 30,000 படகுகள் உள்ள நிலையில், ஒரு படகுக்கு ஒரு நாளைக்கு 25 லீற்றர் வீதம் 5 நாட்களுக்கு ஒருமுறை எரிபொருள் வழங்கப்படவுள்ளதுடன், நெடுந்தீவு மற்றும் பத்தலங்குண்டுவா போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் பண்ணைகளின் மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான எரிபொருளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் எட்டப்படும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும் என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here