அனைவருக்கும் நீதி என்னும் தொனிப் பொருளிலே நீதி அமைச்சின் சட்ட உதவி மற்றும் நீதிச் சேவை முகாம் மன்னாரில் இன்று நடாத்தப்பட்டது
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடனும் சர்வோதயத்தின் ஒழுங்குபடுத்தலுடனும் நீதித்துறை ஆதரவுத் திட்டத்தின் பங்களிப்பிலும் இந்த இலவச சட்ட உதவி முகாம் இன்று (27.05) புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த சேவையை அனைத்து மக்களும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் மக்கள் இலவச பேருந்து சேவையின் மூலம் அழைத்து
வரப்பட்டனர். இதிலேயே விசேட தேவையுள்ளோருக்கும் வாகனங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த நடமாடும் நீதிச்சேவை முகாமிலே
சட்ட உதவிகள், தீர்க்கப்படாத
பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குதல், பிறப்பு இறப்பு பதிவு சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு
பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் டிட்வா புயலின் போது நிவாரணம் பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட குறைபாடுகளைத் தீர்த்து வைத்தல், அனர்த்தத்தில் தொலைந்து போன ஆவணங்களை மீண்டும் பெற உதவுதல், மற்றும் இலவச உளவள ஆலோசனை வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் நடைபெற்றன.
இதில் 36 பேர் இன்றைய தினமே தங்களது பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
அத்தோடு மன்னார் மாவட்டத்திலே
சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தை அணுக முடியாத அளவு வறுமை கோட்டின் கீழ் காணப்படும் மக்களுக்கு சட்ட உதவி ஆணைக்குழு மூலமாக இலவசமாக அவர்களது வழக்குகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், குடும்பங்களுக்கிடையே காணப்படும் சிறுசிறு பிணக்குகளை மத்தியஸ்த சபையின் மூலமாக தீர்த்து வைக்கும் நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த நடமாடும் நீதிச் சேவையிலே மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள மக்கள் கலந்து கொண்டு சேவைகளைப் பெற்றுச் சென்றனர்.
இதேவேளை ,மன்னார் மாவட்டத்தில் இலவச சட்ட ஆணைக்குழுவின் மூலமாக வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுடைய 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.







