பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

33
0
Spread the love

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிள்ளையான் கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து சிஜடியினர் தொடர் விசாரணையில் பிள்ளையானின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசிய தகவல்கள் தெரியவந்துள்ளது.

2006 ஆம் ஆண்டு கல்லடிப் பிரதேசத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும்
பிள்ளையான் குழுவினரால் கோரப்பட்ட கப்பப் பணத்தை வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

அத்துடன் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிள்ளையானின் சொந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமையும்
கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு,
காணாமல் ஆக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளாகச் செயற்பட்டு வந்த காத்தான்குடியைச் சேர்ந்த இருவரை கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் மீதான வழக்குத் தாக்கல் விபரங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் மட்டும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பிள்ளையானின் பாதுகாப்பு காரணங்களினால் அவரை நீதிமன்றிற்கு அழைத்து வர முடியாது என சிஐடியினர் நீதவானிடம் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்றையவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை ‘zoom’ இணையவழி ஊடாக விசாரணை செய்த நீதவான், பிள்ளையான் உட்பட மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் ஏற்கனவே கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிள்ளையானின் மிக நெருங்கிய தோழரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரி.எம்.வி.பி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் என்பவருக்கு எதிராக 7 மனிதக் கொலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனியபாரதி தனக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் சான்றுகளை அழிப்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்திற்கு தீ வைத்த சம்பவத்திலும் பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறி இனியபாரதி கைது செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இன்று பிள்ளையானை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றப் பகுதியைச் சுற்றி விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் நீதிமன்றப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here