அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

10
0
Spread the love

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று காலை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, 2025ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இரு உத்தியோகத்தர்களுக்கும் எதிராக கிடைத்த தொடர் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனையடுத்து, விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருவரும் தற்காலிகமாக வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர், நோர்வூட் பிரதேச செயலாளரால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய கடந்த 31ஆம் திகதி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் 30 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், அஸ்வெசும திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here