செப்டெம்பர் 25 முதல் 27 வரை கீரி கடற்கரையில் ஏற்பாடுகள் – உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அழைப்பு
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலாப் பணியகம் எதிர்வரும் செப்டெம்பர் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மன்னாரில் மூன்று நாட்கள் உலக சுற்றுலா தின விழாவை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (08)செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மன்னாரின் இயற்கை வளங்கள், வரலாற்றுச் சிறப்பு, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தி, மன்னாரை நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக முன்னேற்றுவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவரும் இதன்போது தெரிவித்தனர்.
கீரி கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இவ்விழாவில் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய உணவு வகைகள், பாரம்பரிய விளையாட்டுகள், கடற்கரை சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பட்டத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வுகள் பகல்12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக மன்னார் நகரிலிருந்து கீரி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட பேருந்து போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனிடையே, தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் உலக சுற்றுலா தினத்தன்று நடைபெறவுள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்து வந்த மன்னார் இராமர் பாலம் பகுதியில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த படகு சேவை அன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மன்னாரின் கடல் சார்ந்த சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மேலும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னாரின் இயற்கை மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதிலும் இவ்விழா முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் போது முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்புகளையும் சுற்றுலாப் பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.
மன்னாரின் தனித்துவமான இயற்கை வளங்கள், கடல் சூழல், வரலாற்றுச் சின்னங்கள், பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் கலாசாரத்தை ஒரே இடத்தில் அனுபவிக்கும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இலங்கையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் மன்னாருக்கு வருகை தருமாறு வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மன்னாரை எதிர்காலத்தில் சிறந்த சுற்றுலா இலக்காக மாற்றுவதற்கு அரசாங்க நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள், சுற்றுலாத்துறை பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த முன்னாயத்தக் கலந்துரையாடலில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் வைத்திய அதிகாரிகள், சுற்றுலாத்துறை பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.







