கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய விமான நிலையங்களிலும் பயணிகளைக் கையாளும் திறனை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
விமான நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள பணிகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விமான நிலைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு இணையாக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் மூலம் விமான நிலையங்களின் பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதுடன், நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வலுப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.







