இந்தியாவின் திருச்சி சிறப்பு முகாமில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரான கிருஷ்ணகுமார் கந்தசாமி, இலங்கைக்குத் திரும்பிய நிலையில் கொழும்பு விமான நிலையத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரும், திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சட்ட நடைமுறைகளின் பின்னர் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில், அன்றைய தினம் மாலை சுமார் 5.45 மணியளவில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, இலங்கையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஆர்வலர் ரஜீவ் காந்த் தனது முகநூல் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகுமாருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்பாணையை மீளாய்வு செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்களைத் தாய்நாட்டுக்குத் திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நாடு திரும்பிய கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிருஷ்ணகுமார் 2015ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றிருந்தார். ஆரம்பத்தில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும், பின்னர் மேல்முறையீட்டின் போது அது ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னரும் அவர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இலங்கையில் அவர் கைது செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு எதிரான தடுப்பாணை தொடர்பான மேலதிக உத்தியோகபூர்வ விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.







