கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.454 மில்லியன் போதைப்பொருள் மீட்பு

32
0
Spread the love

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 454 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 46 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் நேற்று (28) மேற்கொண்ட சோதனையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் தொழில்முறையில் பொறியியலாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கட்டார் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான QR 654 என்ற விமானத்தில், பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து தோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

அவரது பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி வகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 5 கிலோ 121 கிராம் கொக்கைன் அடங்கியுள்ளதுடன், அதன் மதிப்பு சுமார் 256 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 13 கிலோ 173 கிராம் எக்ஸ்டசி போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. இது சுமார் 23,000 மாத்திரைகளுக்குச் சமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 198 மில்லியன் ரூபாயாகும்.

இரு வகையான போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 454 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here