இலங்கையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை அடுத்த 7 முதல் 8 நாட்களுக்குள் முழுமையாகத் தீர்க்க முடியும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்திப் பிரதியமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயுக் கப்பல் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதமும், அதனை இறக்கி விநியோகிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களுமே தற்போதைய தட்டுப்பாட்டுக்குக் காரணம் என அவர் விளக்கமளித்துள்ளார்.
எதிர்பார்க்கப்பட்ட காலத்தைவிட எரிவாயுக் கப்பல் இரண்டு நாட்கள் தாமதமாக நாட்டை வந்தடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எரிவாயுவை இறக்குதல் மற்றும் விநியோகத்துக்காகக் கொண்டு செல்லுதல் ஆகிய நடவடிக்கைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் வரையிலான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு உருவாகியுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையைச் சீர்செய்யும் நோக்கில், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 12.5 கிலோகிராம் எடையுடைய ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகித்து வருகிறது.
இருப்பினும், சந்தைக்கு அனுப்பப்படும் எரிவாயு சிலிண்டர்கள் குறுகிய காலத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடுவது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து, எரிவாயு விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெறுகின்றனவா அல்லது சிலிண்டர்கள் திட்டமிட்டுத் தடுத்து வைக்கப்படுகின்றனவா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்ந்துவிடக்கூடும் என்றாலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிலிண்டர் பொதுவாக இரண்டரை முதல் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிவாயு விநியோகத்தைச் சீரமைத்து, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.







