நாட்டில் பல சேவைகளுக்கு இன்றிலிருந்து TIN இலக்கம் கட்டாயமாக்கம்

17
0
Spread the love

வங்கிக் கணக்குத் திறப்பது உட்படப் பல முக்கிய கொடுக்கல் வாங்கல்களின் போது செல்லுபடியாகும் வரிக் செலுத்துவோர் அடையாள இலக்கத்தைச் (TIN – Taxpayer Identification Number) சமர்ப்பிப்பது இன்றிலிருந்து (01.11.2026) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கணக்குகளைத் திறத்தல், கட்டிடப் பிளான் தயாரிப்பிற்கான அனுமதியைப் பெறுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பித்தல் ஆகிய சேவைகளின் போது டிஐஎன் இலக்கத்தைச் சமர்ப்பிப்பது அவசியமாகும். அத்துடன் காணி அல்லது காணி உரிமைகளைப் பதிவு செய்தல், புதிய வியாபாரங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் (Credit Card) பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கும் இந்த இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறித்த கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பதற்கு முன்பாகச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் குறித்த டிஐஎன் இலக்கத்தின் செல்லுபடித் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னமும் டிஐஎன் இலக்கத்தைப் பெறாத நபர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் e-Services இணையத்தள நுழைவாயில் ஊடாகப் பதிவு செய்து கொள்ள முடியும். அத்துடன் ஏற்கனவே பெறப்பட்ட டிஐஎன் இலக்கத்தின் செல்லுபடித் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இந்த இணையத்தள வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவு உறுதி செய்யப்பட்டதும் டிஐஎன் இலக்கம் திரையில் தோன்றும் என்றும், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் டிஐஎன் இலக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட அதன் அச்சுப் பிரதியை (Printed Copy) உத்தியோகபூர்வ சான்றிதழுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும் என்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளுக்கும் டிஐஎன் இலக்கம் கட்டாயமாக்கப்பட்ட போதிலும், அனைவரும் வரி செலுத்த வேண்டும் என பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு நபரின் வருடாந்த வருமானம் 1.8 மில்லியன் ரூபாயைக் (ரூ. 18 லட்சம்) கடக்கும் பட்சத்தில் மட்டுமே அவர் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார். மேலும் இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 13 மில்லியன் பிரஜைகள் இதுவரை டிஐஎன் இலக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here