நாட்டில் நாளாந்தம் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போதைப்பொருள் மற்றும் மதுபானம் உட்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட நடமாடும் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனமும் இணைந்து இந்த அதிரடி சோதனையை இன்று (11) மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையம் மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்தையும் வீதியில் வழிமறித்துச் சோதனையிட்ட போக்குவரத்துப் பொலிஸார், தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் ஆலோசனைகளுக்கு அமையச் சாரதிகளை இந்த நடமாடும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இவ்வாறான சட்டவிரோதப் போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.







