திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலை நிறுவப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப்ப தேரரைக் கைது செய்யுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், அநுராதபுரத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பொலிஸாரின் தாக்குதல்களினால் தனக்குக் கடுமையான முதுகு வலி மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாலேயே நீதிமன்றத்திற்குச் செல்ல முடியவில்லை எனத் தெரிவித்தார்.
தானும் தனது தரப்பினரும் எந்தவொரு சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் அஞ்சப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், அடக்குமுறைகளுக்கும் கைதுகளுக்கும் பயந்து பின்வாங்கப் போவதில்லை எனவும், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தாவது இந்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.







