செம்மணி புதை குழியில் அவர்கள் விதைக்கப்பட்டுள்ளனர் – உதயச்சந்திரா

72
0
Spread the love

 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக கடந்த 16 வருடங்களுக்கு மேலாக வீதியில் நின்று போராடி வருகிறோம் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த ‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ எனும் கருப்பொருளில் ‘காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர்க்கதை’ ஆவணப்படம் திரையிடலும்,கருத்துப் பகிர்வும் இன்று வியாழக்கிழமை (26) மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இங்கு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இசைப்பிரியன் தயாரிப்பில் வெளியிடப்பட்ட நீதிக்கான நீண்ட நாள் காத்திருப்பு காணாமல் போனோரின் கண்ணீர்க்கதை ஆவணப்படம் மன்னாரில் வெளியிடப்பட்டது.

வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டத்திலும் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நிலை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தாய்மார் பட்ட துன்பங்களை ஏனையோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிட்டு வருகிறோம்.

அந்த வகையில் மன்னாரிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.இந்த ஆவணப் படத்தை தயாரித்த இசைப்பிரியன் இன்று எங்களுடன் இல்லை.

ஆனால் அவர் எங்களுடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடி குரல் கொடுத்தவர்.அவர் மரணித்தாலும் அவர் எங்களுக்காக குரல் கொடுத்தவர்.அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

எத்தனையோ வருடங்களாக போராடி விட்டோம்.எமக்கு நீதி கிடைக்கவில்லை.இதற்கு பின்னரும் இந்த அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நீதியை பெற்றுத் தருமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

எவ்வாறாக இருந்தாலும் நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் மட்டுமே எங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வடக்கு கிழக்கில் எத்தனையோ மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி புதை குழியில் நான்கு வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்களின் எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஒரு பிள்ளையை ராணுவம் பிடித்துச் செல்லும் போது தாய் ஒருவர் மேலும் ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்றிருப்பார்.இந்த தாய் இவ்வாறான நிலை ஏற்படும்.தன்னை மண்ணுக்குள் புதைப்பார்கள் என்று நினைத்து அங்கே சென்றிருக்க மாட்டார்.

இவ்வாறு சென்றவர்களையே ராணுவம் கொலை செய்து மண்ணுக்குள் புதைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் ஒவ்வொருவரும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும். நீதியையும், நியாயத்தையும் தட்டிக் கேளுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது உயிரிழந்த இசைப்பிரியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு,ஆவணப்படமும் திரையிடப்பட்டது. குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்பு,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here