செம்மணிப் புதைகுழியைத் தோண்டி எலும்புக்கூடுகளை எடுத்து கடந்தகாலங்களைத் தேடுவதைவிட, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருப்பதற்காக நடவடிக்கையே தற்போது
முன்னெடுக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (02.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“செம்மணிப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நிறைவடையும் எம்மால் தீர்மானமொன்றுக்கு வரமுடியாது.
அடுத்தக்கட்ட அகழ்வுப் பணியின்போது இராணுவத்தின் இலக்கத்தகடு மீட்கப்பட்டால் விசாரணை
அடுத்த கோணத்துக்குள் செல்லும்.
இலங்கை போர் நடைபெற்ற நாடு. புதைகுழி உள்ள இடம் போர் நடைபெற்ற பகுதியாகும்.
அனைத்து தரப்புகளிலும் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, எந்த தரப்பின் துப்பாக்கிச்சூடுமூலம் மக்கள் உயிரிழந்தனர் என்பது மட்டுமே எமக்கு தெரியாமல் உள்ளது.
உயிரிழந்த மக்களின் எலும்புக்கூடுகளை மீட்டு, கடந்தகாலம் பற்றி தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக வைராக்கியமே விதைக்கப்படுகின்றது.
சர்வதேசம் மற்றும் அடிப்படைவாதக்குழுக்களின் நோக்கமும் இதுதான்” என்றார்.







