வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் துரத்தியதில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரைப் போக்குவரத்து பொலிஸார் நேற்று (11.07) வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில், தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எனினும் அவர் மோட்டார் சைக்கிளை
நிறுத்தாமல் சென்ற நிலையில் அவரை துரத்திச் சென்ற போக்குவரத்துப் பொலிஸார் மோட்டார் சைக்கிள் சக்கரத்துக்குள் மரக்கட்டை ஒன்றை வீசி தடுக்க முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அவதானித்த ஊர் மக்கள் அவ்விடத்திலே திரண்டு போக்குவரத்து பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், பொலிஸாரின் அடாவடித்தனத்தால் குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கு நீதி கோரி, நீதிபதி சம்பவ இடத்திற்கு வரும் வரை, சடலத்தை அங்கிருந்து அகற்ற விடமாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இதன் போது,சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர்
குறித்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்து சடலத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டபோது, மக்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துத், தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
இதனையடுத்துப் பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சடலம் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டுப் பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில்
உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலத்திற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சனை ஒன்றும் காணப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெருமளவான பொலிஸார் விசேட அதிரடிப்படையினர்,மற்றும் கலகதடுப்பு பொலிஸாரும் குவிக்கபட்டிருந்தனர்







