மன்னார் தீவு பகுதியில் புதிதாக இரண்டாம் கட்டமாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் (05.09.) வெள்ளிக்கிழமை, மன்னார் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
இரண்டாம் கட்டமாக சவுத்பாரில் 01 காற்றாலையும் தாழ்வுபாட்டில் 02 காற்றாலைகளும் தோட்டவெளியில் 02 காற்றாலைகளும் ஓலைத்தொடுவாயில் 06 காற்றாலைகளும் பேசாலையில் 02 காற்றாலைகளும் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களை அவர்களின் கிராமங்களுக்குச் சென்று காலை தொடக்கம் மாலை வரை சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த மக்கள் சந்திப்பின்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான, K.காதர் மஸ்தான், துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் நகர சபை தவிசாளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார்த் தீவில் காற்றாலை அமைத்தல் மற்றும் கனியவள மணல் அகழ்வு முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என மன்னார் மக்கள் ஒரு மாதகாலமாக தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்து வரும் இந்த நிலையிலேயே அமைச்சர் தலைமையிலான குழு மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.
இதன்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடிய போது ,மக்கள் தமது கிராமங்களுக்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தேவை இல்லை எனவும், மேலும் மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின் கோபுரங்களால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், மீனவர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தீவுப்பகுதிக்குள் காற்றாலை அமைக்க ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்,
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனிய மண் அகழ்வுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் உடன் நிறுத்தி அந்த திட்டத்தினை மன்னார் மாவட்டத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது மக்களுக்கு பதிலளித்த அமைச்சர்,
"ஏற்கனவே இக்காற்றாலைகள் அமைக்கும் விடயமானது முன்னிருந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் இது தொடர்பில் மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்த்துவக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
தற்பொழுது கண்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளையும் நாம் முன்னெடுக்கின்றோம் இவற்றை நிவர்த்தி செய்து மக்களின் சம்மதத்துடனே நாம் இத்திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப் பல திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம். எமது அரசாங்கமானது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடனே செயற்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இதன்போது அனைத்து இடங்களிலும் மக்கள் ஒருமித்த குரலில் எக்காரணம் கொண்டும் காற்றாலையையும் கனியவள மணல் அகழ்வையும் மன்னார் தீவில் அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.








