இந்திய அரசின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில், தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த திட்டங்களின் ஒப்பந்தங்களைப் புதுப்பித்து, அவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி, துறைமுகங்கள், வீடமைப்பு, நீர் வழங்கல் மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
மேலும், ‘டிட்வா’ (Ditwa) புயலால் ஏற்பட்ட சேதங்களை நிவர்த்தி செய்வதற்காக இந்திய அரசாங்கம் வழங்கிய 450 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் மற்றும் உதவிகளின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தில் தனிப் பிரிவொன்றை நிறுவுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.







