எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஒருவருக்கொருவர் எதிராகச் செல்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் கைகோர்த்துச் செல்லும் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வு, நியூயோர் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமானதுடன், இலங்கை நேரப்படி நேற்று (25.00) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமர்வில் உரையாற்றினார்
காசா பகுதியில் தொடர்ந்து இடம்பெரும் கொடூரமான பேரழிவு குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் இரு தரப்பும் உடனடியாக போர்நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி வழங்கவும், அனைத்து தரப்பிலிருந்தும் பணயக்கைதிகளை விடுவிக்க குரல் எழுப்புவதாகவும் வலியுறுத்தினார். இந்த கொடூரமான கொலைகளை நிறுத்துவதற்கு வலுவான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனிற்கு அனைவரும் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், பல உலகளாவிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ள வறுமை குறித்து தனது உரையில் சிறப்பு கவனம் செலுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சமத்துவமின்மை மற்றும் வறுமையை உலகளாவிய பேரழிவாகக் கருதி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ள உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளையும் இங்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் உலக நல்வாழ்விற்கு சவாலாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உலகத் தலைவர்கள் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவது, அவ்வாறான கடத்தல்காரர்கள் அந்தந்த நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் போதைக்கு அடிமையான புனர்வாழ்வு நிலையங்களை உருவாக்குவது குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உலகத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
சமூகத்தில் பாரிய அழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்தும் ஊழல், அபிவிருத்திக்கு தடையாக இருப்பதுடன் ஜனநாயகம் மற்றும் உலக நலனுக்கு தீர்க்கமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கும் காரணமாகின்றன என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , ஊழலுக்கு எதிரான போராட்டம் கடினமான நடவடிக்கையாக இருந்தாலும், அடுத்த தலைமுறைக்காக இலங்கை அதை ஆரம்பித்துள்ளதுடன், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இலங்கை மக்கள் இன்று ‘ வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வையைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்த ஜனாதிபதி , இந்த வரலாற்றுச் சாதனையை நனவாக்க, ஊழலற்ற நெறிமுறைமிக்க நிர்வாகம், வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தூய்மையான நாடு ஆகிய முக்கிய துறைகளில் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதனுடன் இணைந்தவகையில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.







