சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் விபரம் பாதுகாப்பு அமைச்சுக்கு

132
0
Spread the love

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு  பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நேற்று (02.10) விஜயம் மேற்கொண்டார்.

வடமராட்சி கிழக்கில் அண்மைக்காலமாக சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், அதில் பிரதானமாக மணல் கடத்தல் நாளாந்தம் பொலிஸாரின் அனுமதியுடன் இடம்பெற்று வருவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மணல் அகழ்ந்தெடுக்கப்பட்ட பிரதேசத்தை பார்வையிட்ட இளங்குமரன் எம்பி பெருமளவு மணல்  அகழ்ந்தெடுக்கப்பட்ட தாளையடி பகுதிக்கும் விஜயம் மேற்கொண்டார்,

இதன்போது மண் அகழ்ந்தெடுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்ட இளங்குமரன் எம்பி  கவலை வெளியிட்டதுடன்  ஊடகங்களுக்கு சில முக்கிய விடயங்களை வெளிப்படுத்தினார்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஒரு சிலர் தொடர்ந்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் இதற்குப் பிரதான காரணம்  பொலிஸார் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“போதை பொருள் கடத்தல் காரர்களிடம், மணல் கடத்தல் காரர்களிடமும் இலஞ்சம் பெற்று இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கிறார்கள்

பொலிஸார் உரிய முறையில் தமது கடமைகளை செய்திருந்தால் இந்த வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்

கடத்தல் சம்பவங்கள் ஊடாக ஒரு சிலர் அதிகளவான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்திருக்கிறார்கள். அவர்களுடன் சில பொலிஸாரும் அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக வடமராட்சி கிழக்கில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், அவர்களுக்கு உதவி செய்யும் பொலிஸாருடைய பெயர் விபரங்கள் யாவும் நாங்கள் எடுத்துள்ளோம்.

இந்த பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்.

இதனை பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து அவர்களை விசாரணைக்கு அழைக்கும் போது இவர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்

கடந்த அரசாங்கங்கள் போன்று இந்த அரசாங்கத்திலும் கடத்தல் சம்பவங்களை செய்துவிட்டு அல்லது அவர்களுக்கு பொலிஸாரும் உதவி செய்துவிட்டு தப்பி விடலாம் என்று நினைப்பது தவறானது.

இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைவரையும் கைது செய்து சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக ஒழிப்போம்” என்றார்.

பூ.லின்ரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here