மன்னார் காற்றாலை கோபுரங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபையினர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பான தகவல் என வெளிகொணரப்பட்டுள்ளது.
மன்னாரில் காற்றாலைக் கோபுரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை நிலத்தடி மின் விநியோகப் பாதையினால் கொண்டு செல்வதற்கு நிலத்தின் கீழ் கொன்கிரீட் இடப்பட்டுள்ளதாகவும் அதனால் மழை நீர் கடலினுள் வடிந்து செல்ல முடியாமையால்,மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் முறைப்பாடு செய்துள்ளன,
இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (09.10)காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ள நடுக்குடா பகுதியில் நிலத்தடி மின் விநியோகப் பாதைகள் இலங்கை மின்சார சபையினரால் அகழ்வு செய்யப்பட்டு அந்தப் பாதையில் கொன்கிரீட் தளங்கள் அமைக்கப்படவில்லை என்பது மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வு நடவடிக்கையின் போது மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர் மா. காந்தீபன்,மன்னார் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கே திலீபன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் தலைவர் வி எஸ் சிவகரன், அருட்பணியாளர் ஜெயபாலன், ஆகியோர் கலந்து கொண்டதுடன், மின்சார சபையின் சார்பில் பிரதம பொறியியலாளர், C.S கன்னங்கரா,மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்தி பிரிவின் பொது முகாமையாளர் A.A துசித்த எரஞ்ஜீவ, பிரதம பொறியியலாளர் பார்த்திபன், சிவில் பொறியியலாளர் உதயநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மன்னார் மாவட்ட அரச அதிபர் கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக் கையில்,
மன்னார் தீவிலே 30 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன அவற்றிலிருந்து நிலத்தடி வழியாக மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு கொன்கிரீட் தளங்கள் இடப்பட்டுள்ளன ஆகையால் தான் வெள்ள நீர் வடிந்து கடலுக்குள் செல்ல முடியவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டை மன்னார் பொது அமைப்புகள் முன் வைத்திருந்தனர்.
அந்த குற்றச்சாட்டிற்கு மின்சார சபையினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
எனினும் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளில் முக்கியமான ஒன்றாக இவ்விடயம் காணப்பட்டமையால் இன்றைய தினம் இலங்கை மின்சார சபையினரின் ஏற்பாட்டிலே பொது அமைப்புகளின் தலைவர்கள் அனைத்து திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் நிலத்தடி மின் பாதை அகழ்வு செய்யப்பட்டு கொன்கிரீட் தளம் எதுவும் இடப்படவில்லை என்பது எல்லோர் முன்னிலையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.







ரோகினி நிஷாந்தன்







