உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால் இன்றைய தினம் (20.10) தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம்.
உலகம் முழுவதுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, எப்படித் தோன்றியது என்பது குறித்து ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது.
இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி, ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 15 க்குட்பட்ட நாட்களில் தீபாவளிப் பண்டிகை அமைகிறது.
இலங்கை மட்டுமல்லாது, வேறு சில நாடுகளிலும் இந்தப் பண்டிகை தினத்தன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும்கூட இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று, ராமரோடு தொடர்புடையது.
அதாவது ராமன் தனது 14 வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு, லட்சுமணன், சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை அந்நாட்டு மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதுவே தீபாவளி தினம் என்ற ஒரு கதை வழக்கில் இருக்கிறது.
மற்றொரு கதையில், பெரும் அட்டகாசம் செய்துவந்த நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தபோது, தான் இறந்த தினத்தை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அந்த அசுரன் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே தீபாவளி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது







