ஒக்ரோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் மாதமாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டு மார்பக புற்றுநோய் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்கள் நாட்டின் சகல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் மார்பகப் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு நடைபவனி யொன்று இன்றைய தினம் (29.10)புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பெண்களுக்கு ஏற்படுகின்ற மார்பகப் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபவனியானது மன்னார் நகரைச் சென்றடைந்து மீண்டும் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்குச் சென்று நிறைவடைந்துள்ளது.
குறித்த நடைபவனியின் போது மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக மார்பக புற்றுநோய் தொடர்பான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கையேடுகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.
மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி MHM.ஆசாத் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடைபவனியில், வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உத்தியோகத்தர்கள், மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.







