வடமாகாண மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்திருக்கிறார்கள் என விவசாய கமத்தொழில் மற்றும் கால்நடை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(05.11) புதன்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வட மாகாண மக்கள் வீடுகளை இழந்து காடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வியை கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கவில்லை பிள்ளைகளின் கல்வி மாத்திரமல்ல ஏனைய வசதிகளுக்கான ஒரு சூழல் அங்கே உருவாக்கப்பட்டிருக்கவில்லை.வாழ்வாதாரம் தொடர்பில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தார்கள். இரவிலே கேட்கிற ஒரு பல்லியின் சத்தத்துக்கு கூட அரண்டு எழுகின்ற ஒரு சூழ்நிலை தான் அங்கு காணப்பட்டது. உயிரிழப்புக்களால் வீட்டையும் நாட்டையும் விட்டு ஓடிச் செல்ல வேண்டிய சூழ்நிலை
உருவாக்கப்பட்டது.
யுத்தம் முடிந்த பின் மீண்டும் அவர்கள் நாட்டுக்கு வந்தபோது அவர்களுடைய சொத்துக்களோ வீடுகளோ அங்கே இருக்கவில்லை.
எல்லாம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டும் அரச நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டும் இருந்தது. அதிகாரத்தில் இருந்தவர்கள் அதனைக் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள் .
பாரம்பரியமாக மக்களின் ஆட்சியுரிமையில் இருந்த இடங்கள் கைநழுவிப் போயிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 55,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பினை இவ்வாறான ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்னும் 7500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இன்னும் இடங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் அதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் இவ்வாறான நிலங்களை மக்களிடம் கையளிக்கும் ஒரு இணக்கப்பாட்டிற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அதேபோலத்தான் மன்னார் மாவட்டத்திலும் காணி பிரச்சனை இருக்கின்றது.இன்றைய தினம் நான் சென்ற மூன்று இடங்களிலும் இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.பாரம்பரியமாக தங்களது ஆட்சி உரிமைக்கு கீழே இருக்கின்ற நிலங்களில் தாங்கள் சென்று எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவில்லை என மக்கள்என்னிடம் முறைப்பாடு அளித்து இருக்கிறார்கள். எனவே மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறான பிரச்சனைகளை நாங்கள் மிக விரைவாக தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.
அரச அதிபர் உட்பட அதனுடன் தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களும் இந்த செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நான் நம்புகின்றேன்.
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக வடக்கு கிழக்கு மற்றும் சப்ரகமுவ போன்ற சகல பிரதேசங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுகிற ஒரு நாட்டுத் தலைவரை நாங்கள் தேர்வு செய்து இருக்கிறோம்.
எங்களுக்கும் எங்களது ஜனாதிபதி அவர்களுக்கும் விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.இந்தியாவுடன் தொடர்பு படுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக எங்கள் மீதுமுன் வைக்கிறார்கள்.
உண்மையில் நாங்கள் இது தொடர்பாக சரியாக சிந்திக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. இந்த பிரதேசங்கள் தொடர்பாக எங்களுடைய கருத்துக்கள் எண்ணங்கள் அபிலாசைகளை வீணாக்குவதற்காகத்தான் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது என்பதை நான் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த வரவு செலவுத் திட்டத்தை நீங்கள் பார்த்தீர்களானால் பாரிய அளவான நிதி வட மாகாணத்திற்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கிறது.மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பல்வேறு அழிவுக்குட்பட்ட இந்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளை ஒன்றாக சேர்க்க வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது.
எங்களுடைய ஜனாதிபதி அடிக்கடி எங்களிடம் சொல்லுகிற விடயம் என்னவென்றால் எந்த ஒரு மக்கள் பிரிவும் மொழி, இனம், மதம், சாதி, மற்றும் பிரதேச ரீதியாக தாழ்த்தப்படவோ ஒதுக்கப்படவோ கூடாது என்பதே. அவருடைய இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் நாங்கள் இந்த வேலை திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம் .அதனால் பாதிப்புக்கு உட்பட்ட இப்பிரதேசத்தை மீளவும் சாதாரண நிலைக்கு கொண்டு வரும் ஒரு வேலைத் திட்டத்திற்காக உங்களுடைய வலுவான பங்களிப்பையும் பிரயத்தனத்தையும் நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,
விவசாய மற்றும் கால்நடை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன,
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,
மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப்,திட்டமிடல் பணிப்பாளர் ஹலீம்தீன் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.









