புனித அன்னை திரேசா ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 115 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்றைய தினம் (05.11) புதன்கிழமை பாடசாலை சமூகத்தினரால் போதைப் பொருளுக்கு எதிரான நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபவனி குறித்து பாடசாலையின் அதிபர் நாகமணி கிருபாகரன் தெரிவிக்கையில்,
“எங்களது நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப் பொருளுக்கு எதிரான இந்த யுத்தத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக எமது பாடசாலையின் 115 வது ஆண்டு நிறைவு விழாவான இன்றைய தினத்தில் அதிபர் ஆசிரியர் மாணவர்கள் இணைந்து கொண்டு போதைக்கு எதிரான
இந்த நடைபவனியை முன்னெடுத்துள்ளோம்.
நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்கின்ற இந்த போதை பொருளை ஒழிக்கின்ற ஜனாதிபதியின் நடவடிக்கைக்கையில் நாமும் பங்கெடுப்பதை முன்னிட்டு பெரு மகிழ்ச்சி கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.
குறித்த நடைபவனியில் மது போதைக்கு எதிரான, “போதையை தடுத்திடு உன் குடும்பத்தை காத்திடு ”
“அறிவுள்ளோர் கொடிய போதையை தவிர்ப்பார்” “இளையோர் போதைக்கு இல்லை என்று சொல்வோம், வலிமையான நாட்டை உருவாக்குவோம்” என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைச் சுமந்து கோஷங்களை எழுப்பியவாறு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.













