“இலங்கையில் கடல் வளம் மற்றும் நீரியல் வளங்களைப் பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கையும்
முன்னெடுக்கப்படும் எனவும் இதற்காக நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வளக் கண்காட்சி
நேற்று (21.11) கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே
அவர் இதனைக் கூறினார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்
நடைபெற்ற ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார்.
சர்வதேச கண்காட்சியில் அலங்கார மீன்களின் அதிசயங்கள், கடல்வாழ் உயிரினங்கள், நவீன
தொழில்நுட்பம் மற்றும் பரந்த அளவிலான கடல்சார் பயன்பாடுகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குக் கட்டணம் எதுவும் அறிவிடப்படமாட்டாது. எனவே, மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும்
பங்கேற்று பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வின் பின்னர், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நினைவு
முத்திரையும் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு, மீனவர்களுக்குரிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தி
வைக்கப்பட்டது.
அத்துடன், கடற்றொழிலில் இதுவரை குற்றம் இழைக்காத மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழும்
வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல்
அருண ஜயசேகர, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர்
எரங்க வீரரத்ன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர் பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், தெற்காசிய நாடுகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.







