நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களில், 504 குடும்பங்களைச் சேர்ந்த 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் 193 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாவதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







