மன்னார் – யாழ்ப்பாணம் பாதை போக்குவரத்து தடைப்படும்

75
0
Spread the love

நாடு முழுவதும் நிலவிவரும் சீறற்ற காலநிலை அனர்த்தத்திலிருந்து மக்களை மீட்பதற்கான முன் ஆயத்த ஏற்பாடுகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை (27.11) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த நிலைமை பாரியளவில் உருவெடுத்து தற்பொழுது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி இலங்கையை ஊடறுத்து வந்து கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியினை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.அதேவேளை காற்றின் வேகமும் 60 கிலோ மீட்டர் வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மன்னார் மாவட்டத்தின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் வருகின்ற 12 மணி நேரமும் மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரு முக்கியமான காலப் பகுதியாக காணப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் அதிக மழை கிடைக்கும்போது மன்னார் மாவட்டத்திலே அது பாரியவெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும். மன்னாருக்கு நீரைக் கொண்டு வருகின்ற பிரதான ஆறாகிய அருவியாறு (மல்வத்ஓயா) ஆற்றிலே நீர்மட்டம் அபாய மட்டத்தை தாண்டியுள்ளது.

இதன் காரணமாக மடுக்கரை போன்ற சில முக்கியமான கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

அத்தோடு வவுனியாவில் பெய்து வருகின்ற பெருமழை காரணமாக வவுனியாவின் பேராறு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மன்னார் யாழ்ப்பாண வீதியில் இலுப்பை கடைவை பகுதியிலே அதிக அளவிலான நீர் வரத்தினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இன்னும் மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்குள் யாழ்ப்பாணம் மன்னார் வீதியின் போக்குவரத்து தடைபடக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. எனவே இன்றைய தினம் நாங்கள் முப்படையினர் மற்றும் அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்களையும் அழைத்து வருகின்ற அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பில் கலந்துரையாடி உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்ற வேண்டிய இடங்களில் போலீசார் மற்றும் கடற் படையினரின் ஆதரவுடன் மக்களை அகற்றுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அதிக நீர் தேங்கியுள்ள இடங்களில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நீரை வெளியேற்றுவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பாதிப்படைகின்ற மக்கள் உடனடியாக அவ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவுகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் அறிவுறுத்தல்களும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் மன்னார் மாவட்டத்திற்கு வர இருக்கும் பாதிப்பினை தடுப்பதற்கான முழு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.

மன்னார் அரசாங்க அதிபரின் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர் எம் பிரதீப், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரி கே.திலீபன் உட்பட பிரதேச செயலாளர்கள்,மற்றும் அனைத்து திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர் .