கடந்த காலங்களில், செல்வந்தர்களின் உதவியுடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை நாம் முன்வைத்தபோது, தேர்தல் காலத்தில் இதனை கேலி செய்த தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், இன்று அதே திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் கூறிய விடயங்களைப் பார்த்து இவர்கள் கேலி செய்தாலும், அன்று எமது கருத்துக்களை விமர்சித்த அரசாங்கம், இன்று எமது எண்ணக்கருக்களையே அரசின் தேசியக் கொள்கையாக பாராளுமன்றத்தில் அறிவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இறுதியில் உண்மை வெல்லும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டம், அரநாயக்க பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ் அரநாயக்க பிரதேச வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இன்று (20) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது 5 நோயாளி கண்காணிப்பு இயந்திரங்கள், 1 மருந்து செலுத்தும் இயந்திரம் மற்றும் 1 ஊசி செலுத்தும் இயந்திரம் என்பன நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்:
“இடம்பெயர்ந்துள்ள மற்றும் வீடற்றிருக்கும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான காணிகளில் வீடுகளைக் கட்டுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பற்ற இடங்களில் குடியிருந்தவர்களே அனர்த்தம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆகையால், பாதுகாப்பான காணிகளில் தரமான வீடுகளை அமைத்து, அவர்கள் அங்கிருந்தே தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றின் ஊடாக இவை முன்னெடுக்கப்பட வேண்டும்.”
“யாரும் ‘டித்வா’ புயலை ஒரு சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறான அலட்சியமான பார்வையால்தான், சுனாமியிலிருந்து கூட நம்மால் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியாமல் போனது. இன்றும் கூட ‘டாப்ளர்’ ராடார் அமைப்புகளை நிறுவிக் கொள்ள முடியாமல்தானே போயுள்ளது? இயற்கை அனர்த்தங்களை நாம் தொடர்ந்து சந்திக்க இதுவே காரணமாகிறது. இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உயிரிழப்புகள் விடயத்தில் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியடையப்போவதில்லை” என்றார்.







