மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவு இன்றைய தினம் (09.01) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த விசேட சிகிச்சை நிலையத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி திறந்து வைத்தார்.
இதுவரை நரம்பியல் நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சத்திர சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் மக்கள் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் போக்குவரத்து சிரமங்களையும் எதிர்கொண்டு வந்தனர்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் எம்.எச்.எம். அஸாத் விடுத்த வேண்டுகோளின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலின் கீழ்,
மன்னார் மக்களுக்கு முழுமையான நரம்பியல் சிகிச்சைகள் மன்னாரிலேயே வழங்கப்படும் வகையில் இந்த விசேட சிகிச்சை பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் இந்த கிளினிக் சேவையை வழங்க உள்ளனர்.
இந்த ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் எம்.எச்.எம். அஸாத், நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் டொக்டர் எம். பிரியதர்ஷன், சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் டொக்டர் எஸ். தர்சன், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் இந்த விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை கிளினிக் நடைபெறவுள்ளதாகவும், பொதுமக்கள் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் எம்.எச்.எம். அஸாத் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.








