வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ‘வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா’
இன்றைய தினம் (18.01) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரர் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது ,சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வு, காலை 9.00 மணியளவில் திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடலில் நடைபெற்றதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து , அங்கு விசேட பொங்கல் நிகழ்வும், கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு தமிழர்களின் பாரம்பரியத்தை தழுவிய, முட்டி உடைத்தல், ஓலை பின்னுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்றன.
அத்தோடு பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கும் விதமாக,மன்னார் மாவட்ட, கலைமன்றங்களுக்கான ஆற்றுகைப் பொருட்களும், விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்தப் பொங்கல் விழாவைக் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் எம். பற்றிக் டிரஞ்சன் உரையாற்றுகையில்,
வடக்கு மாகாணத்தில் உள்ள பாரம்பரியமான கலாச்சார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதை முதன்மைக் கடமையாகக் கொண்டு, மாகாண கலாச்சார அலகு பல்வேறு பரிணாமங்களில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், எமது திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் கலாச்சார நிகழ்வுகளின் முதலாவது நிகழ்வாக ஒவ்வோர் ஆண்டும் தைப்பொங்கல் விழா திட்டமிடப்படுவதுடன், அது வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் நடாத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இவ்வருடத்திற்கான தைப்பொங்கல் கலாச்சார விழா மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படுகின்றது. இதற்கு முன்னதாக, 2024 ஆம் ஆண்டில் மாகாண கலாச்சார விழாவும் மன்னார் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் சமமாகக் கருதி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் சுழற்சி முறையில் இவ்வகையான கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளின் அடிப்படை நோக்கம், மறந்து போகின்ற அல்லது மறக்கடிக்கப்பட்டு வரும் தமிழர்களின் உண்மையான கலாச்சார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதாகும்.
மேலும், இந்த தைப்பொங்கல் விழா வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறுவது ஒரு விசேட அம்சமாகும் எனத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கலந்து கொண்டதோடு, சிறப்பு விருந்தினராக
வடக்கு மாகாண பிரதம செயலாளர், தனுஜா முருகேசன் மற்றும் கௌரவ விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கலந்து கொண்டார் .
அத்தோடு மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப், மன்னார் பிரதேச செயலாளர் எம். காந்தீபன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.சாந்தசீலன் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர்கள் விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.








